திருகோணமலையில் யானை- மனித மோதலை தவிர்க்கும் வகையில் யானை வேலிகளை தொழிநுட்ப ரீதியாக அமைக்க தீர்மானம் !!!
திருகோணமலை மாவட்டத்தில் யானை- மனித மோதலை தவிர்க்கும் வகையில் யானை வேலிகளை தொழிநுட்ப ரீதியாக எவ்வாறு அமைத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யானை- மனித மோதல் அண்மைக்காலங்களில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக யானைகளின் வாழ்விடங்கள் மனித செயற்பாடு காரணமாக பாதிக்கப்பட்டமையால் யானைகள் மக்கள் வாழ்விடங்களுக்குள் பிரவேசிக்கின்றது.எனவே மக்களை பாதுகாக்கும் அதேவேளை யானைகளையும் பாதுகாக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது.சில இடங்களில் யானைகள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றன.இது கவலைக்குறிய விடயமாகும்.மக்கள் வாழிடம் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களை பாதுகாக்க முறையான திட்டமிடலுடன்கூடிய யானைவேலி நிர்மாணிக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்படல் வேண்டும்.இதன்மூலம் யானை -மனித மோதலை தவிர்க்க முடியும் என்று இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் பங்குபற்றலுடன்கூடிய யானை வேலி எவ்வாறு அமைக்கப்படல் வேண்டும், அதனை நீண்டகாலம் எவ்வாறு பராமரிப்பது , கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்பற்றி இதன்போது கலாநிதி பிரிதிவிராஜ்ஜினால் தெளிவுபடுத்தப்பட்டது.
மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுக்கும் இப்பிரச்சினைக்கு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் யானைவேலி எதிர்காலத்தில் உரிய திணைக்களங்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதன்மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எல். பி.மதநாயக்க, மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே. பரமேஸ்வரன், பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

