ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 46 ஆவது கூட்டத்தொடரில் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை, 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இணையவழி மெய்நிகர் முறைமையில், இலங்கை நேரப்படி, பிற்பகல் 4.30 அளவில் ஜெனிவாவில் இடம்பெற்றது.
47 உறுப்பு நாடுகளைக்கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன.
இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல், என்ற தலைப்பிலான குறித்த பிரேரணை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது.
பிரேரணைக்கு ஆதரவாக, ஆர்ஜண்டீனா, ஆர்மேனியா, ஒஸ்ட்ரியா, பகாமாஸ், பிரேஸில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மாரக், பிஜி, ஃப்ரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்ஸிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியா, உக்ரேன், பிரித்தானியா, உருகுவே முதலான நாடுகள் வாக்களித்தன.
பிரேரணைக்கு எதிராக, பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்ரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான், வெனிசுவெலா முதலான நாடுகள் வாக்களித்தன.
இதேநேரம், இந்தியா, ஜப்பான். பஹ்ரேய்ன், பெர்கினா ஃபாஸோ, கெமரூன், காபொன், இந்தோனேசியா, லிபியா, மொரிடானியா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ முதலான நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தன.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, இணையவழி ஊடாக ஜெனிவாவில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உறுதி செய்யப்பட்டு, சம உரிமையுடன் வாழ்வாதற்கான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையானது, இறைமையையும், ஜனநாயகத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.