இறந்த குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல அம்பியூலன்ஸ் வழங்க மறுத்த தோட்ட நிர்வாகம்! தோட்ட அதிகாரிக்கு தோட்ட மக்கள் எதிர்ப்பு!!

மூன்று வயது குழந்தை உயிரிழந்த தறுவாயில் குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல தோட்ட நிர்வாகத்திடம் அம்பியூலன்ஸ் வழங்க மறுத்துள்ளது.
இந்தச் சம்பவம் பூண்டுலோயா பழைய தோட்டம் கீழ்ப் பிரிவில் நேற்றிரவு நடந்துள்ளது.
குழந்தை பிறந்தது முதலே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு உயிரிழந்துள்ளது. குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திடம் அம்பியூலன்ஸ் கோரியுள்ளனர்.
எனினும், தோட்ட நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்பின்னர் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் தனியார் வாகனம் ஒன்றில் குழந்தையின் உடலை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கே தோட்டங்களுக்கு அம்பியுலன்ஸ் வழங்கியுள்ள நிலையில், இதனை ஏன் தோட்ட நிர்வாகம் தர மறுக்கிறது என தோட்ட மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குழந்தையின் உடல் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டதை அடுத்து, குறித்த தோட்ட அதிகாரி அந்தப் பகுதியின் ஊடாக வாகனத்தில் பயணித்துள்ளார். இதன்போது வாகனத்தை இடைமறித்த தோட்ட மக்கள், அம்பியூலன்ஸ் தர மறுத்ததைக் கண்டித்துள்ளனர்.
இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பொலிசார் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தோட்ட அதிகாரியை அனுப்பிவைத்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் தமது தோட்டம் உள்ளிட்ட வேறு எந்தத் தோட்டத்திலும் நடக்கக் கூடாது என்றும் தோட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.