ஷார்ஜாவில் திறக்கப்பட இருக்கும் "மிதக்கும் தியேட்டர்" ஷார்ஜா ஆட்சியாளரே உருவாக்கிய டிசைன்

அரபு உலகத்தில் கலாச்சார மையமாகத் திகழும் ஷார்ஜா பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய விழுமியங்களைக் கொண்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள ஹவுஸ் ஆஃப் விஸ்டம் மற்றும் கோர்ஃபக்கான் ஆம்பிதியேட்டர் என மக்கள் மனதைக் கவர்ந்த இடங்களின் வரிசையில் விரைவில் இடம்பெற இருக்கிறது மிதக்கும் தியேட்டர்
கல்பா நகரத்தின் கார்னிச் பகுதியில் அமைக்கப்பட இருக்கும் இந்த மிதக்கும் தியேட்டர் பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என நம்பப்படுகிறது. உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி இந்த தியேட்டர் அமைய இருக்கும் இடத்தினைப் பார்வையிட்டு, கட்டுமான பணிகளையும் துவங்கி வைத்தார்
சிப்பியின் வடிவில் அமைய உள்ள இந்த தியேட்டரின் வடிவத்தை ஷார்ஜா ஆட்சியாளரே தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.தியேட்டரின் வெளிப்புறம் நீரால் சூழப்பட்டுள்ளது. கல்பா கார்னிச் மற்றும் அரபிக்கடலை பார்த்தபடி திரைப்படம் பார்க்கும் அற்புதமான அனுபவத்தை இந்த தியேட்டர் மக்களுக்கு வழங்க இருப்பதாக ஷார்ஜா ஊடக அலுவலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.