இன்று இரவு முதல் உரடங்கு அமுல் : நாளை இரவு முதல் திருமண நிகழ்வுகளை நடத்த தடை...

நாடளாவிய ரீதியில் இன்று முதல் இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் திருமண நிகழ்வுகளை நடத்த நாளைய தினம் நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தடுப்பு செயலணியின் தலைவருமான இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடுவதற்கு எந்தவொரு வகையிலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் ஒரு தடவையில் 50 வீதமானோருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது இடங்களில் சமூக இடைவெளியை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமை காரணமாக பல்வேறு அரச நிறுவனங்களின் சேவைகள் இன்று முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளன.