திருகோணமலையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு : 67500 மில்லி லீட்டர் கோடா உடன் மூவர் கைது ...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா,பீலியடி பள்ளம் குளத்துக்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூன்றுபேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் விற்பனைக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த 90 கசிப்பு போத்தல்களும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 67500 மில்லி லிட்டர் கோடா,பரல்கள் மற்றும் பல உடற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்ற பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் தற்பொழுது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற வேளையில் மதுபான சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் கசிப்பு உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதாக திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூன்று பேரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.



