Header Ads

Breaking News
recent

கிழக்கு மாகாண கோவிட் மரணங்களில் தடுப்பு மருந்து பெறாதவர்களே அதிகம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தௌபீக் தெரிவிப்பு


(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 43 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளர்களும், 720 மரணங்களும் ஏற்பட்டுள்ளது. கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக 5 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஓக்ஸ்ட் மாதத்தில் மாத்திரம் 21 ஆயிரத்தி 800 நோயாளர்களைத் தாண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மூன்று மாத காலங்களில் மே மாதம் 119 உம், ஜூன் மாதம் 132 உம், ஜூலை மாதம் 106 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் ஓக்கஸ்ட் மாதத்தில் 555 மரணங்கள் சடுதியாக உயர்வடைந்துள்ளது. இச்சடுதியான அதிகரிப்பு டெல்டா பிறள்வினால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ள நிலையில் . கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் 15 இலட்சத்துக்கு அதிகமான தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

இதில் 7 இலட்சத்தி 65 ஆயிரத்தி 447 தடுப்பு மருந்துகள் முதல் முறையாகவும், 4 இலட்சத்தி 85 ஆயிரம் தடுப்பு மருந்துகள் இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 18 – 30 வயதுக்குற்பட்ட முன்நிலை கள உத்தியோகத்தர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், ஆசிரியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் ஆகியோர்களுக்கு இத்தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளின் கீழ் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு 90 சத வீதமான தடுப்பு மருந்துகள் முதலாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 75 சத வீதத்துக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 50 சத வீதத்துக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 60 சத வீதத்துக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளும், திருகோணமலை மாவட்டத்தில் 60 சத வீதத்துக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகள் இரண்டாவது முறையாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 95 சத வீதமான இரண்டாவது தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு நிலையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு இராணுவத்தின் உதவியோடு சகல மாவட்டங்களிலும் உள்ள மருத்துவ பொது சுகாதார வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து வீடுகளுக்குச் சென்று வழங்கி வருகின்றனர். மேலும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அஸ்ரா செனிக்கா என்ற தடுப்பு மருந்துகள் வழங்கும் விஷேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக இவ்வாரம் கிடைக்க இருக்கின்ற தடுப்பு மருந்துகளையும், மிகுதியாக இருக்கின்ற மருந்துகளையும் பூரணமாக வழங்கி 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது கட்டமாக வழங்கி பூரணப்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் 20 வயதுக்கும், 30 வயதுக்குட்டவர்களுக்கு தேவையான அளவு தடுப்பு மருந்துகள் அரசாங்கத்தினால் வழங்க திட்டமிட்டுள்ளது. இச்செயற்திட்டம் மேல் மாகாணம், தென் மாகாணம் போன்ற மாகாணங்களில் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஏற்பட்டுள்ள தொற்றாளர்களையும், ஏற்பட்ட மரணங்களையும் ஆய்வு செய்யும்போது இதுவரை தடுப்பு மருந்து ஏதும் பெற்றுக்கொள்ளாதவர்களும், முதலாவது தடுப்பு மருந்து பெற்று சிறிது காலம் சென்றவர்களுமே அதிகமாக மரணித்துள்ளார்கள். எனவே, இதுவரை தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பு மருந்து வழங்கும் இடங்களுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொண்டு தங்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு தடுப்பு மருந்துகள் பெற்றாலும் உங்களது பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்வதற்காக தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்ந்து கொண்டு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை சரிவரப் பேணிக்கொள்ளல் அவசியமாகும் என்றார்.
Powered by Blogger.