யானை மனிதன் மோதல் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையில் யானை : சுட்டித்தனம் காட்டும் குட்டி யானை...
திருகோணமலை-எத்தாபெந்திவெவ பகுதியில் வாய்வெடி உட்கொண்ட யானை விழுந்த நிலையில் அதன் குட்டி யானை சோகத்தில் சுற்றி திரிவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இச்சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எத்தாபெந்திவெவ பகுதியில் கடந்த சில நாட்களாக வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் வாய் வெடிகளை பயன்படுத்தி வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் பன்றி, மான், மறைகள் போன்றவற்றை வேட்டையாடுவதற்காக வாய் வெடிகளை பயன்படுத்தி வருவதாகவும் இதனை யானைகளும் உட்கொண்டு வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இருந்தபோதிலும் வாய் வெடிகளை உட் கொண்ட யானையே வாயில் பலத்த காயங்களுடன் இவ்வாறு விழுந்து கிடப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையில் வாய்வெடிகளை உட்கொண்டு அதிக அளவில் உயிரிழந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் தற்போது சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் மக்கள் தமது விவசாய நிலங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ஹக்கபடஸ் என்றழக்கப்படும் வாய் வெடிகளை பயன்படுத்தி வருவதினால் இந்த காலகட்டத்தில் அதிகளவிலான யானைகள் உயிரிழப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக மக்கள் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தால் சட்ட நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுததி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மொரவெவ பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.