வலயக்கல்விப் பணிமனையில் பல மணி நேரம் காத்திருந்த பெற்றோர்கள் : தமது பாடசாலைக்குரிய பாட ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துமாறு கோரிக்கை : தீர்வாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் மாத்திரம் ஆசிரியகள் பணியில்...
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட மட்கோ அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களை நேரில் சந்திக்கச் சென்றபோது அவர் அலுவலகத்தில் இல்லை என தெரிந்தும் சற்று நேரத்தில் அவர் வருவதாக கூறி பல மணி நேரங்கள் காக்க வைத்து திருப்பி அனுப்பப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
திருகோணமலை மட்கோ அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்மையினை ஒரு வருடத்திற்கும் மேலாக திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கப்பட்ட போதிலும் இது தொடர்பில் எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த சனிக்கிழமை (15) அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் மீண்டும் அவ்விடயம் தொடர்பில் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளரை நேரில் சென்று சந்திக்க வருகை தந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது
இதன்போது அல் மின்ஹாஜ் பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்
தாங்கள் காலை 9.30மணி முதல் மதியம் 2 மணி வரை திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் காத்திருந்ததாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர் சற்று நேரத்தில் வருவதாக கூறிய அதிகாரிகள் உரிய முறையில் தமக்கு சரியான தகவல்கள் வழங்கவில்லை எனவும் பின்னர் தாங்கள் பணிப்பாளர் வருவாரா? என கேட்ட போது அவர் வரமாட்டார் நீங்கள் போவதென்றால் போகலாமென திருகோணமலை வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாகவும் கவலை தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவ்விடத்தில் வருகை தந்ததை அடுத்து குறித்த பெற்றோர்களிடம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து ஒளிப்பதிவு செய்யப்பட்ட போதிலும் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அல் மின்ஹாஜ் முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களை வலயக் கல்வி அலுவலகத்திற்கு உள்ளே வரவழைத்து நாளைய தினம் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் வருகை தருவதாகவும் பின்னர் அதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் கூறி குறித்த பெற்றோர்களை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாகவும் குறித்த பெற்றோர் கருத்து தெரிவித்திருந்தார்.
மீண்டும் குறித்த பெற்றோர்கள் நேற்றைய தினம் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் அவர்களை நேரில் சென்று சந்தித்தபோது நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பெற்றோர்களினல் தெளிவுபடுத்தப்பட்டதுடன் தமது கோரிக்கையான திருகோணமலை மட்கோ அல் மின்ஹாஜ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் பல பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் இல்லை என ஒரு வருடத்திற்கும் மேலாக தங்களுக்கு அறிவித்தல் வழங்கியும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கவலையுடன் நேற்றையதினம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்ததாகவும் உரிய அதிகாரிகள் உரிய முறையில் தகவல்களை வழங்கி உதவவில்லை எனவும் குறித்த பாடசாலையின் பெற்றோர்கள் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்தனர்
அதன் பிரதிபலனாக திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் அவர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு பாடங்களுக்கான ஆசிரியர்களை (வாரத்திற்கு இரண்டு நாட்கள் மாத்திரம்) பணிக்கு அமர்த்துமாறு எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கியதுடன் கணித பாடத்திற்கான ஆசிரியரை வெகுவிரைவில் பெற்று தருவதாகவும் உறுதி அளித்திருந்தார் இதுதொடர்பில் பெற்றோர்கள் அவருக்கு நன்றியினையும்வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்
இருந்தபோதிலும் நேற்று இடம்பெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் உடனான சந்திப்பின் போது வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் ஸ்ரீதரன் அவர்கள் வருகை தந்த பெற்றோர்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் ஊடகங்களுக்கு இவ்விடயம் தொடர்பில் அறிவித்தமைக்கு கடும் காரசாரமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி பேசியதாகவும் நேற்றையதினம் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளரை சந்திப்பதற்காக பாடசாலையின் பெற்றோர்கள் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாத்திரமே சென்ற போதிலும் இவ்வாறு முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி பேசியது தமக்குப் பெரும் கவலையளிப்பதாக பெற்றோர்களில் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்
இவ்விடயம் தொடர்பில் தாங்கள் தமது பிள்ளைகளின் படிப்பு விடயம் சம்பந்தமாகவும், பிள்ளைகளின் எதிர்கால தூர நோக்கத்துடனும், பாடசாலையின் எதிர்கால வளர்ச்சி தொடர்பிலும் மாத்திரமே தாங்கள் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளரை சந்திக்க சென்றதாகவும் எந்த ஒரு சொந்த தேவைக்கும் அவரை நாங்கள் சந்திக்கவில்லை எனவும் இவ்வாறு பணிப்பாளர் நடந்து கொண்டது ஒரு முறையற்ற செயல் எனவும் பெற்றோர்களின் சிலர் விசனம் தெரிவித்தனர்
மேலும் மூவின மக்களும் செறிந்து வாழும் திருகோணமலை நகரில் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எஸ். ஸ்ரீதரன் அவர்கள் இவ்வாறு பெண்கள் முன்நின்று ஒரு சமூகப் பிரச்சினையை வெளிக்கொண்டு வரும் போது உரிய முறையில் அவர்களை கௌரவப்படுத்தி அதற்கான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டியது அவரின் கடமை எனவும் கல்விசார் ஊழியர் என்ற வகையிலும் அரச அதிகாரி என்ற வகையிலும் அவர் உரிய முறையில் நடந்து கொள்ளவில்லை எனவும் இதற்கான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கண்டனம் தெரிவித்ததுடன்
குறித்த பாடசாலையில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.