இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி...
அப்துல் சலாம் யாசீம்
திருகோணமலை ரொட்டவெவ,மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கை கலப்புடன் தொடர்புடைய குறித்த இரு குழுக்களுக்கிடையே தொடர்ந்தும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடைக்குச் சென்ற சிறுவனை தாக்கியதுடன் மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் மூன்று சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேநேரம் மற்றைய குழுவில் மூன்று சிறார்கள் தங்களை தாக்கியதாக 1990 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த 05 சிறுவர்களில் 03 மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 16 வயதுக்கு குறைந்தவர்களே அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
