திருமலையில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை : 38 க்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம்..
அப்துல் சலாம் யாசீம்
திருகோணமலை- வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூரல் பகுதியில் இன்று (14) மாலை வீசிய காற்றினால் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
உப்பூரல் பிரதேசத்தில் பலத்த இடிியுடன் கூடிய மழை பெய்து வந்த போது காற்று மிகவும் வேகமாக வீசியது.
இதனால் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மீனவர்களின் வள்ளங்கள் சில சேதமடைந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் ஏற்பட்ட சேத விபரங்களை வெருகல் பிரதேச செயலகம் ஊடாக திரட்டி வருவதாகவும் இதுவரை குறித்த பிரதேசத்தில் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.
அத்துடன் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பில் தகவல்களை பெற்று மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பேரில் வெருகல் பிரதேச செயலாளரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் தோப்பூர் பிரதேசத்தில் ஆசாத் நகர் மற்றும் ஜின்னா நகர் பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை பெய்தாக பிரதேச மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











