தமிழக முதல்வர் ஸ்டாலினை உதவிக்கு அழைக்கும் பிரிவேல்த் குளோபல் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர்...
நூருல் ஹுதா உமர் & பாறுக் ஷிஹான்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 2,000 மில்லியன் ரூபாயளவில் மோசடி செய்து விட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன பிரதானி ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோரை இந்திய தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் சார்பில் தலைவர், செயலாளர், பிரதித்தலைவர் ஆகியோர் இன்று (06) மாலை கல்முனை தனியார் மண்டபத்தில் ஊடகங்களிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.
மேலும், அங்கு கருத்துத்தெரிவித்த அவர்கள்,
பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட 1,400 குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியினால் நிர்க்கதியாகியுள்ளது. குருவி சேர்ப்பது போன்று சேமித்த பணம், வீடு கட்ட சேமித்த பணம், அங்கவீனர்களின் பணம் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோர் தொடர்பில் இந்தியாவில் நடைபெற்று வந்த நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் 95 சதவீத அளவில் முடிந்துள்ளதாக அறிகிறோம்.
சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமென்று நம்புகிறோம். உங்களின் தந்தை கலைஞரின் வழியில் இலங்கை தமிழ்ப்பேசும் மக்களுக்கு நன்மை கிட்டும் வகையில் இது தொடர்பில் நேரடியாகத் தலையிட்டு இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
மேலும், மட்டக்களப்பு, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை நீதிமன்றங்களில் இவர்களுக்கெதிராக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
கடந்த 2020.03.26 அன்று பாராளுமன்றத்தில் கூட இது தொடர்பில் பேசப்பட்டது. 2020.11.08 அன்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். சர்வதேச பொலிஸாரின் அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படியான இம்மோசடி விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும்.
இது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சற்று ஆறுதலாளிக்கும் விடயமாக அமையும். இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் கடுமையான கஷ்டங்களிலும், மனவுளைச்சலிலும் இருக்கின்றோம் என்றனர்.

