கொழும்பில் இடம்பெறும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருமலையில் ஆர்ப்பாட்டம்...
ரவ்பீக் பாயிஸ்
கொழும்பில் இடம்பெறும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோடா -ரணில் ஆட்சியை விரட்டி அடிப்போம் எனும் தொனிப்பொருளில் திருகோணமலையில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.
திருக்கோணமலை அபயபுர சுற்று வட்டத்தில் இன்று (09) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
தற்பொழுது ஆட்சியில் உள்ளவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும், மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டை சூறையாடியது போதும் இன்றே வெளியேறு, வெளியேறு வெளியேறு கொள்ளைக்கார கூட்டமே வெளியேறு மற்றும் தலைமை என்பது தீர்வு... ஆனால் இங்கு தலைவனே எமன் என்ற பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூடியுள்ள மக்கள் வெறுமனே அரிசி பருப்பு, எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடவில்லை எனவும் ஒரு அரசியல் மறுமலர்ச்சி வேண்டும் என்ற நோக்கில் இன மத மொழி பேதமின்றி இன்றைய தினம் இந்த இடத்தில் ஒன்றுகூடி இருப்பதாகவும் அரசாங்கத்தை வழிநடத்த முடியாமல் நாட்டை இன்னும் சீரழிக்காது உடன் பதவி விலகி நாட்டை சீரான வழியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண மக்கள் குரல்கள் அமைப்பின் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர இவ்வாறு கருத்து தெரிவித்தார்...
தற்போது கொழும்பில் மட்டுமல்லாது நாடு பூராகவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் மேலும் கொழும்பில் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடும் இன்றைய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக இன்றைய தினம் திருகோணமலையில் கட்சி பேதம் இன்றி அனைத்து மக்களும் ஒன்று திரண்டு தமது ஆதரவினை தெரிவிக்கும் முகமாக இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதே வேளை கொழும்பில் இடம்பெறும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை நகரின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாற்றம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.











