சினிமா பாணியில் கம்பளங்களிலும் தும்புத்தடிகளிலும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாது : பாடசாலைகளை வழமை போன்று நடாத்த அரச வாகனங்களையாவது பயன்படுத்துமாறு கோரிக்கை - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்...
ரவ்பீக் பாயிஸ்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு முரணாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளை வழமை போன்று நடத்த வேண்டுமாயின் அரச சேவைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் ஊடாக அதிபர் ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கேட்டுக்கொண்டு கேட்டுக் கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகள் வாரத்தின் மூன்று நாட்கள் நடத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (02) திருவோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்ற போதே இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் திருவோணமலை மாவட்ட செயலாளர் ரோஷன் அக்மிமன்ன தெரிவித்தார்.
மேலும் கல்வி அமைச்சினால் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என மாகாண கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ந.ஜெயதீபன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு மேலாக மாகாண கல்வி பணிப்பாளரினால் சுற்றுநிறுபம் ஒன்றின் மூலம் அறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை நடாத்துவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் ஆசிரியர்கள் நாங்கள் வழமை போன்று பாடசாலைக்கு சமூகமளித்திருப்போம் ஆனால் எந்த ஒரு சுற்று நிறுவத்தின் ஊடாகவும் அறிக்கை வெளியிடப்படாமல் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் கோரிக்கையினை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறு விடுமுறை காலங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விடுமுறையினை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என இதன் போதும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ந.ஜெயதீபன் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு மாகாண கல்வி செயலாளரினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வாரத்தில் மூன்று நாட்கள் நடாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட விடயம் வேடிக்கையான விடயம் எனவும் எரிபொருள் தட்டுப்பாடான இந்த சூழ்நிலையில் திரைப்படங்களில் வருவது போன்று கம்பளிகளிலும் தும்புத்தடிகளிலும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாது எனவும் முதலில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்வதற்கான மாற்று வழி செய்துவிட்டு பாடசாலைகள் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்ற அறிக்கையினை வெளியிட்டால் வாரத்தில் 5 நாட்களும் பாடசாலைக்குச் சென்று அதிபர் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு தயாராக உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் ந.ஜெயதீபன் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடுக்கு காரணமாக இருந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக பதவிக்கு வந்த பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களும் நாட்டை இன்னமும் நாசமாக்கி குட்டிச்சுவராக்கி சீரழித்துக் கொண்டிருக்கின்றனர் எனவே நாட்டு மக்கள் அனைவரும் நமது சுதந்திரத்திற்காக இந்த அரசியல்வாதிகள் வீடு செல்ல வீதிக்கு இறங்கி போராட முன் வர வேண்டும் எனவும் இதன் போது அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



