Header Ads

Breaking News
recent

நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலை அல்லது தனி நபரைபாதுகாக்க வேண்டாம் : நாட்டு மக்களை பாதுகாக்க பாதுகாப்பு தரப்பினருக்கு அழைப்பு - எதிர்க்கட்சித் தலைவர்



இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும், எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்காக கட்சி நிற பேதங்களை மறந்து முன்வருமாறும் கேட்டுக் கொண்டார்.


இத் தருணத்தில், நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலையோ அல்லது தனி நபரையோ பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடமும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.


இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில் 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முயற்சித்தால் அது துரதிஷ்டவசமான நிலை எனவும் அவர் தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்கப்பால் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் தெரிவித்தார்.
Powered by Blogger.