சுற்றுலா துறையை மீழ்கட்டியெழுப்ப தற்போது சரியான தருணம் : சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய செயலமர்வில் தெரிவிப்பு
ரவ்பீக் பாயிஸ்
சுற்றுலாத்துறையை மீழக்கட்டியெழுப்பும் நோக்கில்
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய செயலமர்வொன்று திருகோணமலை ஸ்வர்க்கா விடுதியில் இன்று (27) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம்
மற்றும் அவுஸ்திரேலிய உதவித்திட்டத்தின் கீழாக
உள்ளடக்க வளர்ச்சிக்கான திறன்கள் அமைப்பினால் இது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் கலாமதி பத்ம ராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பொது முகாமையாளர் ஞானசேகரன்,
சமூக சுற்றுலாத்துறை உருப்பினர்கள், விடுதி உரிமையாளர்கள், சிறு மற்றும் நடுத்தர விடுதி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன் போது கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையானது கடந்த 2020ம் ஆண்டிலிருந்து பின்னடைவை சந்தித்திருந்த போதிலும் அண்மைக்காலத்தில் அதனை கட்டியெழுப்புவதற்கு உவப்பான காலநிலை நிலவி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மேலும் நாடு சந்தித்துள்ள பின்னடைவிலிருந்து மீட்டெடுப்பதற்கு நாட்டுக்கு டொலர் அவசியம் அதனை அடைவதற்கு சுற்றுலாத்துறையானது முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். அதனையே அரசாங்கமும் ஒரு முக்கிய விடயமாக கருத்தில்கொண்டு செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.
