ஒட்டமாவடி - மீராவோடை தமிழ்க்கிராமத்தில் இருப்பத்தேழு பேருக்கெதிராக எச்சரிக்கை சிவப்புத்துண்டு!!!!
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மீராவோடை தமிழ்க் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையில் இருப்பத்தேழு பேருக்கு எச்சரிக்கை சிவப்புத்துண்டு வழங்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடை தமிழ்க் கிராமத்திலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தலைமையில் இடம்பெற்ற பரிசோதனையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம்.எஸ்.நௌபர், எஸ்.யசோதரன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்த இருப்பத்தேழு பேருக்கு எச்சரிக்கை சிவப்புத்துண்டு வழங்கப்பட்டதுடன், எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர்கள் சுத்தமில்லாமல் மீண்டும் வைத்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஒலிபெருக்கு மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டது.


