விசேட சுற்றிவளைப்பு : ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றல்!!!!

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொஸ்கொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காலியில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பேருந்தொன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு துறையினரால் இன்று அதிகாலை குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் குறித்த பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சந்தேகநபரான குறித்த பேருந்தின் சாரதி காலி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கிடையில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதியான ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேக நபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் 7 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.