பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!!!

யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தில் இன்று (19) பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணி சுவீகரிப்பு செயற்பாடுகளை நிறுத்த கோரியும் வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களும், பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து ,போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஆயினும் இன்றைய தினம் காணி அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் காணி அளவிடுவதற்கு அங்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நாளாந்தம் திடீர் திடீரென மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரின் தேவைகளுக்காக அதிகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் செலவிடுவதை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்க கோரியும் வேலணைப் பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.
இதன்போது வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு எமது நிலம் எமக்கு வேண்டும், சுவீகரிக்காதே சுவீகரிக்காதே எமது காணிகளை சுவீகரிக்காதே, நிறுத்து நிறுத்து காணிகளை அளவிடுவதை நிறுத்து, வேண்டும் வேண்டும் எமது காணிகள் எமக்கு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.