Header Ads

Breaking News
recent

மூதூரில் 600 ஏக்கர் விவசாய காணிகள் விடுவிப்பு :மாவட்ட அரசாங்க அதிபரினால் விவசாய நடவடிக்கை அங்குரார்ப்பணம்...


திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி கிராமத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 600 ஏக்கர் அளவிலான விவசாயம் செய்வதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இன்று (29) இறால்குழி பிரதேசத்தில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

பல வருட காலமாக விவசாயம் செய்யப்படாமல் இப்பிரதேசம் கைவிடப்பட்டதாக காணப்பட்டது. முன்னர் இப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கை மேற் கொண்டதாகவும் அதன் பின்னர் வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட ஏனைய திணைக்களங்கள் பிரதேசத்துக்குள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்று பிரதேச விவசாயிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்

எனவே இப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கையை மேற் கொள்வதற்கான அனுமதியை தந்துதவுமாறு இப்பிரதேச விவசாயிகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து இப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இதன்போது அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பயிர் செய்ய முடியுமான ஒவ்வொரு பிரதேசத்திலும் விவசாயசெய்கையினை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் . அதற்கிணங்க திருகோணமலை மாவட்டத்தில் விவசாயம் செய்ய முடியுமான பிரதேசங்கள் இனங்காணப்பட்டு, விடுவிக்கப்பட்டு , அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இவ் வேலைத் திட்டத்திற்கு அமையவிவசாயம் செய்ய முடியுமான பிரதேசங்களை இனங்கண்டு அவற்றின் விவசாயம் செய்யவுள்ள தடையை நிவர்த்தி செய்து மக்களுக்கு விவசாயம் செய்வதற்கான அனுமதி வழங்குவதற்கான பொறிமுறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல தெரிவித்தார்.

இதன் மூலம் மாவட்டத்தினுடைய உற்பத்தி அதிகரித்து மேலதிகமாக உற்பத்திகளை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு வழங்க கூடியதாக அமையும். இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைந்து வருமான மட்டம் உயர்வடைய காரணமாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாரக் ,பிரதேச அரசியல் பிரமுகர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் விவசாய சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.