குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு விசேட அறிவிப்பு : தவிசாளர் அ.முபாறக்...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி.அனுராதா யகம்பத் அவர்களின் பணிப்புரைக்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி 200க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 168 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை வளாகம் என்பனவற்றை தூய்மைப்படுத்தி மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளதாகவும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 2 வாரங்கள் மாணவர்களது உளவளத்துணை தொடர்பான செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி.அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பாடசாலை வளாகத்தினை அழகு படுத்தும் நோக்குடன் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் ஊழியர்களின் பங்களிப்புடனும் பாடசாலைகளில் சிரமதான பணிகள் இடம்பெறும்போது ஒத்துழைப்பு வழங்குமாறு குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அ.முபாறக் கேட்டுக்கொண்டுள்ளார்
எனவே குறித்த திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் தங்களின் பாடசாலைகளில் சிரமதான பணிகள் நடைபெறும் போது குச்சவெளி பிரதேச சபையினூடாக தங்களின் சிரமதான பணிகளுக்கு தேவையான உதவிகளை பெற மற்றும் குடிநீர் வசதிகள் தேவைப்படின் பிரதேச சபை தொலைபேசி இலக்கமான 0262252526 இலக்கத்தினை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அ.முபாறக் கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் கோவிட் வைரஸ் நிலை காரணமாக மாணவர்களது கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு பாடசாலை கல்வியை தொடர்வது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அத்துடன் அவர்களுக்கு உளவளத்துணை மற்றும் பாடசாலை கல்வி தொடர்பில் ஆசை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதால் பெற்றோர்கள் அவர்களது மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள அதிக ஒத்துழைப்பு வழங்குமாறு குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அ.முபாறக் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்