பொலிசார் விரட்டியதில் தப்பிக்க முயன்ற நபர் கூரையில் இருந்து விழுந்து படுகாயம்...
(பதுர்தீன் சியானா)
திருகோணமலை - நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொலிசார் முற்பட்டபோது வீட்டின் கூரைமேல் ஏறி தப்பிச் செல்ல முற்பட்ட போது கூரையில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த நிமால் பண்டார (42வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மனைவி உயிருடன் இருக்கும் வேளை மற்றுமொரு திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து முதலாவது மனைவி குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றத்தினால் குறித்த இரண்டு பிள்ளைகளுக்கும் பணம் செலுத்துமாறு கட்டளை விடப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த கட்டளையின்படி பணத்தை செலுத்தாமல் வழக்கு தவளைகளுக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ய சென்ற போது பொலிஸாரை கண்டு கதவை மூடி விட்டு கூரை மேல் ஏறி தப்பிச் செல்ல முற்பட்ட போது கூரையிலிருந்து வீழ்ந்து கால் மற்றும் பல் உடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் குறித்த நபரை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.