யுத்தத்தினால் அநீதிகளுக்கு உள்ளான மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய ஆணைக் குழு நியமித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு நிவாரணப் பணிகள் ஆரம்பம் : கிழக்கு மாகாண ஆளுநர்...
ரவ்பீக் பாயிஸ்
ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (19) இச்சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து உதவிகளை வழங்குவதாகவும்,இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு கல்வியை தொடர உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் உறுதி அளித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் 30 வருடகால யுத்தத்தினால் சிலர் அநீதிகளுக்கு உள்ளான நிலையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக் குழுவொன்றை தான் நியமித்துள்ளதாகவும், ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆளுநரின் செயலாளர் எல்.பீ.மத நாயக்க உதவிச் செயலாளர் ஏ. ஜீ.தேவேந்திரன் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் சாலுகா ஆகியோர் கலந்து கொண்டனர்.