நாடாளுமன்றம் தீ வைக்கப்பட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல : ஆர்ப்பாட்டக்காரர்கள்...
(வீரகேசரி - எம்.எப்.எம்.பஸீர், நா. தனுஜா)
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பாராளுமன்றம் தெரிவுசெய்துள்ள ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாகத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென மக்கள் தன்னெழுச்சிப்போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி ரணில் விக்ரமசிங்வைத் துரத்தும் வரை தொடர்ச்சியாகப் போராடப்போவதாகவும், அடக்குமுறைகளைமீறி அப்போராட்டம் தொடரும் எனவும் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம'வில் விசேட செய்தியாளர் சந்திப்பினை நடாத்தி போராட்டக்காரர்கள் இன்று அறிவித்தனர்.
இன்று 102 ஆவது நாளாகவும் காலிமுக்ததிடலில் மக்களின் தன்னெழுச்சிப்போராட்டம் தொடர்ந்த நிலையில் பாராளுமன்றம் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவுசெய்ததுடன் தன்னெழுச்சிப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள போராட்டக்காரர்கள் இணைந்து ஊடக சந்திப்பொன்றை நடாத்தினர்.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான வசந்த முதலிகே கூறியதாவது:
69 இலட்சம் வாக்குகளுடன் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாலை 3 மணிக்கு இரகசியமாக மாலைதீவுக்குத் தப்பியோட இந்தத் தன்னெழுச்சிப்போராட்டம் காரணமாக அமைந்தது.
இது நடக்கும்போது மக்களாணை பொதுஜன பெரமுனவிற்கே இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் நிராகரித்ததுடன் மஹிந்த ராஜபக்ஷவையும் பதவியிலிருந்து நீக்க இந்தப் போராட்டம் காரணமானது.
இந்த இரு சம்பவங்களுடனும் பொதுஜன பெரமுனவிற்கு இருந்த மக்களாணை காலாவதியாகிவிட்டது.
அவ்வாறிருக்கையில் காலாவதியான பொதுஜன பெரமுனவின் வாக்குகளைப் பயன்படுத்திப் பாராளுமன்றத்திற்குள் நடந்த சதிகளுடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்தவொரு மக்களாணையும் இல்லை. 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தவராவார்.
தேசிய பட்டியல் ஊடாகப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அவரை கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் நலனுக்காகப் பிரதமராக்கவில்லை.
ராஜபக்ஷ குடும்பத்தின் நலனுக்காகவே அவர் பிரதமராக்கப்பட்டார். அவ்வாறிருக்கையில் மக்களாணை இல்லாத ரணில் விக்ரமசிங்கவை நாம் ஜனாதிபதியாக ஏற்கமாட்டோம்.
அவரை விரட்டியடிக்கும் வரை இந்தத் தன்னெழுச்சிப்போராட்டத்தை மக்கள் நிறுத்தப்போவதில்லை. எம்மை அடித்துவிரட்டி, கைதுசெய்து, சுட்டுப்பொசுக்கி இந்தப் போராட்டத்தை முடிவிற்குக்கொண்டுவரலாமென ரணில் விக்ரமசிங்க நினைக்கக்கூடாது.
ரணிலால் தற்போதைய பிரச்சினைக்கு எந்தத் தீர்வினையும் வழங்கமுடியாது. ஏனெனில் அவர் ஏற்கனவே 6 முறை பிரதமராக இருந்தவராவார்.
மத்திய வங்கி கொள்கை, பட்டலந்த வதை முகாம் போன்ற சம்பவங்களுடன் அவருக்கு உள்ள தொடர்பு ஒன்றும் இரகசியமல்ல.
தற்போதைய பாராளுமன்றம் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை. இப்படியே மக்களாணையை மீறி செயற்பட்டால் பாராளுமன்றத்தை மக்கள் தீவைத்து எரிக்கும் நிலையேற்படும். அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் அதனை எம்மீது சுமத்தி, எங்களைத்தேடி வரவேண்டாம்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு என்ன நடக்கப்போகின்றது என்பது இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் தெளிவாகும். எமது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.
